தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

22-09-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

22-09-2017 கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளது தமிழகத்தின் பெரும்பாலான பிற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழையே இல்லை என்றே சொல்லலாம் மேலும் தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 2 ° முதல் 3° செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படுகிறது.22-09-2017 இன்று ஒரு சில தமிழக உள் மாவட்டங்களிலும் ,தென் மாவட்டங்களிலும்,வட மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.22-09-2017 இன்று இரவு  அல்லது 23-09-2017 நாளை காலை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.நான் 17-09-2017 அன்று இதற்கு முந்தைய பதிவில் பதிவிட்டு இருந்தது போல 23-09-2017 நாளை இரவு அல்லது 24-09-2017 ஆம்  தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மற்றும் வட மாவட்டங்களில் மழையின் அளவு மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம்.

17-09-2017 அன்று எழுதிய பதிவில் 24-09-2017 ஆம் தேதி வாக்கில் ஆந்திரா அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தேன் தற்பொழுது நான் முன்னர் கூறியிருந்த தேதியில் இருந்து இரண்டு நாட்கள் இடைவெளியில் 26-09-2017 அல்லது 27-09-2017 அன்று ஆந்திரா அருகே வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது அதனால் ஆந்திரா ,ராயல்சீமா ,தெலுங்கானா ,கர்நாடகா மாநிலங்கள் உட்பட தமிழக வட கடலோர மற்றும் வட மாவட்டங்களும் அன்று முதல் இரண்டு நாட்களுக்கு நல்ல பயனை பெரும் . மொத்தத்தில் அடுத்து வரக்கூடிய வாரம் சென்னைக்கு ஒரு சிறப்பான வாரமாக அமையக்கூடும் தமிழக வட மற்றும் வட கடலோர மாவட்டங்களும் அதனால் பயன்பெறும்.நான் குறிப்பிட்ட அனைத்தும் 22-09-2017 இன்று நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

21-09-2017 இன்று காலை காரைக்கால் கீரைத்தோட்டம் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது - தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களும் கடுமையாக போராடி வருகின்றனர்

21-09-2017 இன்று காலை காரைக்கால் கீரைத்தோட்டம் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென அருகில் இருக்கும் வீடுகளுக்கும் பரவியது,இன்னுமும் பரவி வருகிறது குறுகலான சாலை என்பதாலும் தீ விபத்து ஏற்பட்ட விஷயத்தை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக  அங்கு வந்து குவிந்ததாலும்  தீயை அணைப்பதிலும் ,தீயணைப்பு வாகனம் செல்வதிலும் சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது.மக்கள் தொடர்ந்து குடிவந்ததாலும் ,சாலைகளின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததாலும் ஜீவானந்தம் வீதி - PSR திரையரங்கம் செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து காவலர்களின் வருகைக்கு பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு தற்பொழுது தீயை அணைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.தீ பரவியதற்கான காரணங்கள்  குறித்தும் சேதங்கள்  குறித்தும்  முழுமையான தகவல் இதுவரையில் தெரியவில்லை.40க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானதாகவும் ஒருவர் உயிரிழந்து இருபாதகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்து வருகின்றனர். அனைத்து தகவல்களுடன் இன்னும் சற்று நேரத்தில் இதே பக்கத்தில் இப்பதிவு புதுப்பிக்கப்படும் .


காரைக்கால்  ஜீவானந்தம் மற்றும் கம்மாளர் வீதிகளில் இருந்து PSR திரையரங்கு செல்லும் சாலையில் ஒப்பிலாமணியர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது தான் இந்த கீரைத்தோட்டம் பகுதி ,சிறிய நிலப்பரப்பில் குளத்தை ஒட்டி திட்டத்திட்ட 300 க்கு மேற்பட்ட வீடுகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.21-09-2017 அன்று காலை 9:30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது காற்றின் வேகம் சற்று கூடுதலாக இருந்த காரணத்தால் அருகில் இருக்கும் குடியிருப்புகளுக்கும் தீ வேகமாக பரவ தொடங்கியது.தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முற்படும் பொழுது திடீரென குடியிருப்புகளில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் ஒவ்வொன்றாக வெடித்து சிதற தொடங்கின. சமையல் எரிவாயு உருளைகள் வெடித்த பொழுது ஏற்பட்ட சப்தம் அரை கிலோமீட்டர் வரை உணரப்பட்டது பின்னர் கீரைத்தோட்டத்தை சுற்றி இருக்கும் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது அதன் பிறகு காரைக்கால் ONGC மற்றும் மார்க் தனியார் துறைமுகங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன திட்டத்திட்ட ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது இந்த தீ விபத்தில் 40 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானதாகவும் ,முதியவர் ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரியவந்துளது.

21-09-2017 அன்று தீ விபத்து ஏற்பட்ட கீரைத்தோட்டம் பகுதியில் ஸ்ரீ சிங்கமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது அந்த கோயில் சன்னதியில் 70 வயது நிரம்பிய முதியவரான மோகன் என்பவர் தனது மனைவி மஞ்சுளாவுடன் வசித்து வந்துள்ளார்.உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மஞ்சுளா சிகிச்சை பெற்று வருவதால் மோகன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.வீடு தீப்பிடிக்க தொடங்கியவுடன் வெளியே வரமுடியாமல் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளார்.தீ கட்டுக்குள் வந்த பிறகு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் அப்பகுதிக்கு வந்து மக்களுக்கு தற்காலிக உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்து சென்றனர்.மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இர்மா புயலா ? சமூக ஊடங்கங்களில் பரவி வரும் வதந்திகளால் பரபரப்பு - உண்மையில் இர்மா புயல் போன்றதொரு புயல் தமிழகத்துக்கு அருகில் உருவாவதற்கு வாய்ப்புகள் உண்டா ? ஒரு தெளிவான பார்வை

தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய - ஜெர்மன் சஸ்டைனபிலிட்டி மையம் ஐ ஐ டி சென்னையுடன் இனைந்து  நடத்திய ஆய்வு ஒன்றில் சென்னையில் வருங்காலங்களில் சமீபத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய ஸ்டேஜ் 5 (அதி பயங்கர புயலான ) இர்மாவை போல வலிமைமிக்க புயல்கள் தாக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த தகவல் சில தினங்களுக்கு முன் இந்தியாவின் பிரபலமான நாளிதழ் ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அது வெளியாகிய பொழுது இருந்த பரபரப்பை விட அதன் பின் சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸஆப்பில் அந்த தகவல் வெளியாகிய பொழுது பொதுமக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது தற்பொழுதும் ஏற்படுத்தி வந்துகொண்டுள்ளது என்றால் அது மிகையாகுது.இதற்கு முக்கிய காரணம் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் பகிரப்படும் பொழுது அதற்கு கண்ணு ,காது ,மூக்கு எல்லாம் உருவாகிவிடுகிறது அம்மா சில தங்களது சொந்தக் கருத்துக்களையும் அதனுடன் இணைந்து விடுகின்றனர் அதில் ஒன்று தான் இந்த நவம்பர் மாத இறுதியில் இர்மா போன்றதொரு புயல் சென்னையை தாக்கும்  என்ற வதந்தி.

சரி உண்மையில் அந்த ஐ ஐ டி சென்னையின் ஆய்வில் தெரியவந்தது என்ன? 
அந்த நாளிதழில் வழங்கியிருக்கும் முக்கிய தகவல்களை அப்படியே தமிழாக்கம் செய்கிறேன் கேளுங்கள்.அடுத்த மூன்று பத்தாண்டுகளில் அதாவது 30 ஆண்டுகளில் சென்னையின் அருகே உள்ள கடல் நீர் மட்டம் 4.35 மீட்டர் முதல் 6.85 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அதனால் 1,963 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு பாதிப்புக்கு உள்ளாக  வாய்ப்பு இருப்பதாகவும்  அதில் தெவிக்கப்பட்டுள்ளது.இந்த கடல் நீர் மட்ட உயர்வுக்கு ஏற்றாற்போல் கடலோர பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தா விட்டால் தமிழகம் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் கடலோர கட்டுப்பாட்டு மண்டலங்களில் மேலாண்மை பணிகளை மேற்கொள்வது தற்பொழுது முக்கியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2016  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையின் அருகே கரையை கடந்த வர்தா புயலால் சென்னையின் கடல் நீர் மட்டம் 20 அடி வரை உயர்ந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது மேலும் கடல் நீர் மட்டம் 1 மீட்டர் உயர்ந்தால் 38.2 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் அதனால்  மக்கள் குடியிருப்பு பகுதிகள் ,வணிக நிறுவனங்கள் ,தொழிற்சாலைகள் உட்பட அந்த நிலப்பரப்பில் உள்ள அனைத்துமே பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதுவே 3 மீட்டர் வரை கடல் நீர் மட்டம் உயர்கிறது என்றால் திட்டத்திட்ட 101.96 சதுர கிலோமீட்டர் பாதிப்புக்கு உள்ளாகும் என அதில் கூறப்பட்டுள்ளது ஆகையால் சென்னையில் தற்பொழுது ஏற்பட்டு இருக்கும் இந்த கடல் நீர் மட்டத்தின் உயர்வால் வருங்காலங்களில் இர்மா வை போல அதி பயங்கர புயல்களை எதிர்கொள்ளும்  நிலை ஏற்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்னவென்றால் கடல் நீர் மட்டம் உயர்வதால் அடுத்த 30 ஆண்டுகளில் சென்னைக்கு அருகே சக்தி வாய்ந்த புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை துரிதப்படுத்தவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது அவ்வளவு தான். அந்த சக்தி வாய்ந்த புயலுக்கு உதாரணமாக இர்மா புயலை குறிப்பிட்டு இருக்கின்றனர்.

இதில் நவம்பர் மாதம் இர்மா போன்றதொரு புயல் உறவாகும் என்ற தகவலை யார் கிளப்பிவிட்டது என்று தான் தெரியவில்லை அப்படியே ஒரு சக்தி வாய்ந்த புயல் சென்னைக்கு அருகே உருவாக வாய்ப்பு இருந்தாலும் அதனை 10 முதல் 15 நாட்களுக்கு முன்னதாகவே நம்மால் கணித்து விட முடியும் அத்தகைய தொழில் நுட்ப வளர்ச்சி நம்மிடம் உண்டு ஆகையால் அதற்கான முன்னேற்பாடுகளையும்  செய்து விடலாம் அப்படியிருக்க தேவையற்ற வதந்திகளை நம்பி அதையே உண்மையென அனைவருக்கும் பகிர்ந்து பரப்பி வருவது போன்ற ஒரு செயலை சிந்திக்கும் திறன் கொண்ட யாரும் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

17-09-2017 இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

17-09-2017 ஆம் தேதி முதல் இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் என்று  பார்ப்பதற்கு முன் 12-09-2017 அன்று நமது தளத்தில் பதிவு செய்யப்பட்ட கடந்த வாரத்துக்கான வானிலை தகவல்களை நினைவூட்ட  விரும்புகிறேன்.12-09-2017 அன்று எழுதிய பதிவில் 16-09-2017 முதல் அரபிக்கடலை ஒட்டியுள்ள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையின் வீரியம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பதிவிட்டு இருந்தேன் நேற்று கேரளாவில் மழையின் அளவு அதிகரித்திருந்தது இன்றும் அது தொடர்கிறது அதனால் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மேற்கு தொடர்ச்சி பகுதிகள் பலன் அடைந்து வருகின்றன  மேலும் 12-09-2017 அன்று எழுதிய பதிவில் 17-08-2017 ,18-09-2017,19-09-2017 ஆகிய தேதிகளில் மும்பையில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியிருந்தேன் அதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது இன்று இரவு முதல் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் நாளை முதல் மும்பை பகுதியில் கனமழைக்கு வாய்ப்புண்டு 12-09-2017 அன்று எழுதிய பதிவில் குறியிருந்ததை போல மும்பை நகரின் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு  ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் கடந்த பதிவுகளில் வங்கக்கடலில்  ஒரு மேலடுக்கு சுழர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியிருந்தேன் தற்பொழுது மியன்மர் அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது அது இன்னும் சில மணி நேரங்களில் வலுவிழக்க  வாய்ப்புள்ளது அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மியான்மர் ,வங்கதேசம் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீண்டும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு வாய்ப்புள்ளது.நான் இதற்கு முந்தைய பதிவுகளில்  கூறியிருந்ததை போல 19-09-2017 அன்று வங்கக்கடலில் வட ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு அருகே ஒரு மேலடுக்கு சுழற்ச்சி உருவாக வாய்ப்புகள் உள்ளது அதனால் இந்திய வட கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களும் ஆந்திரம் ,தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களின்  வட மாவட்டங்களும் நல்ல மழையை காணும்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் 12-09-2017 அன்று எழுதிய பதிவில் கூறியிருந்தது  போல இனி வரக்கூடிய வாரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது அதனால் மழையே பெய்யாது என்று அர்த்தமில்லை மழை தொடர்ந்து பெய்யும் ஆனால் அதன் அளவு கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது சற்று குறைவாகவே இருக்கும் 17-09-2017 நேற்று தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது 18-09-2017 இன்றும் தமிழகத்தில் ஓரளவு நல்ல மழையை எதிர்பார்க்கலாம் அதன் பிறகு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புண்டு 23-09-2017 முதல் தமிழகத்தில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் மேலும் 24-09-2017 அன்று ஆந்திரா அருகே வங்கக்கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது இம்முறை ஒடிசா அருகே அல்லாமல் சற்று கீழே அதாவது மத்திய ஆந்திர பகுதிகளுக்கு அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது .இவை அனைத்தும்  தற்பொழுது நிலவி வரும் வானிலையை உள்ளடிக்கிய ஒரு கணிப்பு தான் இதில் எதாவது மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.14-09-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

14-09-2017 இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ,பண்ணைக்காடு பகுதிகளில் நலன் மழைக்கு வாய்ப்புண்டு.இன்று நீலகிரி மாவட்டத்திலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.ஈரோடு மாவட்டம் ஆசனூர் ,பண்ணாரி அருகே உள்ள பகுதிகளிலும் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.இன்று இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் நலன் மழைக்கு வாய்ப்புண்டு.


14-09-2017  இன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புண்டு.காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மற்றும் சென்னையின் ஒரு சில பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

14-09-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

14-09-2017 இன்று தர்மபுரி ,கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

14-09-2017 இன்று தேனி மாவட்டத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.


14-09-2017 நேற்று புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் அமைச்சருடன் இரவு நேர ரோந்தில் ஈடுபட்ட முதல்வர் நாராயணசாமி...இரவு நேரங்களில் புதுச்சேரி வீதிகளின் மின் விளக்கு வசதிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்

13-09-2017 (புதன்கிழமை ) நேற்று இரவு புதுச்சேரியின் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனுடன் இணைந்து முதல்வர் நாராயணசாமி திடீர் ஆய்வில் ஈடுபட்டார். திட்டத்திட்ட 25 கி.மீ தொலைவு நேற்று முதல்வர் இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரி வீதிகளில் பயணம் செய்ததாக முதல்வரின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் புதுச்சேரியில் உரிய மின்  விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளனவா பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனரா என்பதை ஆய்வு செய்யவே இந்த திடீர் ரோந்து நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
 

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி சீருடையுடன் ஆசிரியருக்கு தேநீர் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவன்...முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தால் பரபரப்பு...அரசுப்பள்ளிகளில் மாணவர்களை கையாளும் விதம் குறித்து சமூக ஆர்வலர்கள் காட்டம்

சில தினங்களுக்கு முன்பு முகநூலில் காரைக்கால் தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்வுகளை வெளியிடும் முகநூல் பக்கம் ஒன்றில் காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த அரசுப்பள்ளி மாணவன் ஒருவன் பள்ளி நேரத்தில் பள்ளி சீருடையுடன் குடுவையில் (Flask) தேநீர் வாங்கிக்கொண்டு செல்லும்  புகைப்படம் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.அந்த மாணவன் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியருக்கு தேநீர் வாங்கி சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த புகைப்படத்தில் பள்ளியின் வாசலில் சீருடையுடன் அந்த மாணவன் குடுவையை கையில் ஏந்தி பள்ளியை நோக்கி செல்வதை அழகாக பதிவு செய்து இருக்கின்றனர் அந்த புகைப்படம் தற்பொழுது காரைக்கால் முகநூல் பயனீட்டாளர்களிடம் வைரலாகி வருகிறது.

அந்த மாணவன் இடைவெளியின் பொழுது வெளியே வந்திருக்கலாம் என்று எடுத்துக்கொண்டாலும் அச்சமயத்தில் அவனை தவிர வேறு மாணவர்கள் யாறும் ஏன் அங்கு இல்லை என்ற கேள்வி எழுகிறது ஒருவேளை அவன் விடுமுறை நாளில் இப்படி நின்றிருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் விடுமுறை நாளில் அரசுப் பள்ளி மாணவன் ஏன் சீருடையுடன் திரிய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது இந்த இரு கேள்விகளுக்கான பதிலை தேடி சென்றாலே அந்த மாணவன் பள்ளி இயங்குகையில் வெளியில் சென்று வந்தது தெளிவாக தெரியவந்துவிடும்.சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் வகுப்பு நடைபெறும் சமையத்தில் ஒரு மாணவன் வெளியே சென்று உள்ளே வருகிறான் என்றால் அது அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு தெரியாமலா இருக்கும் ? இல்லை ஆசிரியர்களின் அனுமதியுடன் தான் அவன் வெளியில் சென்று குடுவையுடன் உள்ளே வந்தானா ? இந்த இரு கேள்விகளுக்கும்  பதிலை தேடினால் அந்த புகைப்படத்தின் உள்ளடக்கம்  தெளிவாக புரிந்துவிடும்.இந்த புகைப்படம் தொடர்பாக நாம் இதற்கு மேல் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை இது பல அரசுப்பள்ளிகளில் வாடிக்கையாக நடக்கும் ஒரு நிகழ்வாக கூட இருக்கலாம் ஆனால் இது முறைதானா ? என்பது தான் இப்போதைய கேள்வி.

ஜாதி ,மதம் ,உயர்ந்தவன் ,தாழ்ந்தவன் ,பணக்காரன் ,ஏழை போன்ற வித்தியாசங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான் அவர்களை சீருடை அணிந்து பள்ளிக்கு வரச்சொன்னோம் ஆனால் ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர்களை மதிப்பெண்களுக்கு ஏற்ப  தரம்பிரித்து வருகின்றனர் என்பதையும் இந்த காட்சி விளக்குகிறது பரிட்சையில் நிறைய மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பெஞ்சையும் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தரையையும் சில பள்ளிகள் தரம் பிரித்து ஒதுக்கி வருவதாகவும் சில மாணவர்கள் கூறுகின்றனர்.சில பள்ளிகளில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களை தேநீர்,சமோசா போன்றவற்றை வாங்கி வருவதற்கும் எடுபுடி வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்களாம்.

இதில் அதிகமாக பாதிக்கப்படுவது வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தும் சமூகத்தில் பின்தங்கிய வகுப்பை சார்ந்த மாணவர்களும் தான்.தன் மகன் தன்னை விட ஒரு படியாவது மேலே வந்து விட வேண்டும் என்பதற்காகவே  ஏழை ,எளிய பாமர மக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவைக்கின்றனர் ஆனால் அங்கு அவர்கள் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள் என்று  அவர்களுக்கு தெரிவதில்லை குறைந்த மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் வகுப்பறையில் மற்ற மாணவர்கள் முன் அவுமானப்படுத்துவதாகவும் சில மாணவர்கள் கூறிவருகின்றனர் இதனால் சிறு வயது முதலே அவர்கள் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.சரி பள்ளிகளில் மாணவர்களை கையாளும் விதங்களை விவாதிக்க இந்த ஒரு பதிவு போதாது மீண்டும் ஒரு பதிவில் அவற்றை விரிவாக விவாதிக்கலாம்.

தற்பொழுது முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த புகைப்பட விவகாரத்துக்கு வருவோம்,இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு எப்படியும் மூன்று முதல் நான்று நாட்களுக்கு மேல் இருக்கும்.ஆனால் காரைக்கால் கல்வித்துறை இதுகுறித்து என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்று இதுவரையில் புரியாத புதிராகவே உள்ளது.இந்த விவகாரத்தில் நடவடிக்கை என்று ஒன்று எடுத்தால் மட்டுமே அரசு பள்ளிகளை தேடி வரும் ஏழை மாணவர்களின் கண்ணியம் காக்கப்படும்.

ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் இந்த விவகாரம் தொடர்பாக நல்லதொரு முடிவை எடுத்து இதைப்போன்ற விஷயங்கள் இனி வரக்கூடிய காலங்களில் நடவாமல் இருக்க ஒரு முற்றுப்புள்ளியை வைப்பார்கள் என நம்பலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...