தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

எடப்பாடிக்கு வாக்களித்தது ஏன் நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரியின் விளக்கம்

தமிழக முதல்வராக சிறைக்கு செல்லும் முன் சசிகலா கை கட்டிய  எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சட்டமன்ற கூட்டத்தில் வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாவரும் தொகுதி திரும்ப முடியாமல் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனராம்.இந்நிலையில் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி ஏன்  சட்டமன்றத்தில்  எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்தேன் என தன் பக்கம் இருக்கும் நியாயத்தை விளக்கமாக முகநூலில் பதிவிட்டு உள்ளார்.இதோ அவர் பதிவிட்டு இருந்த விளக்கங்கள் உங்களுக்காக

அன்புக்குரிய நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி சகோதர … , சகோதரிகளே … நீங்கள் நலம்பெற வாழ்த்துக்கள் !

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தங்களுடன் கருத்து பரிமாற விரும்புகிறேன் . தங்களின் பேராதரவோடு நான் சட்டமன்ற உறுப்பினராகி, எளிமையான அணுகுமுறைகளோடு , நேர்மையாக பணியாற்றி வருகிறேன் இதை நீங்கள் அறிவீர்கள் .

எமது தோழமை கட்சியான அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து , யார் முதல்வராக வரவேண்டும் என்ற விவாதம் அரசியலை பரபரப்பாக்கியது. இது குறித்து தொகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என தினமும் நூற்றுக்கணக்கான அலைப்பேசி அழைப்புகள் வந்தன .

அதனை மதித்து வேறு யாரும் செய்யத் துணியாத அரிய முயற்சியை , என் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைப்படி முன்னெடுத்தேன் . கருத்துப் பெட்டியை வைத்து கருத்தாய்வை மேற்கொண்டேன் . அனைவருமே பாரட்டினார்கள் .

அங்கு 2 ஆயிரம் படிவங்கள் பூர்த்தியாயின . ஆனால் மக்கள் மேலும் திரண்டார்கள் . திரு . நாகராஜன் என்பவர் தலைமையில் சிலர் வந்து “ OPS - க்கு ஆதரவாக போடுங்க “ என கூச்சல் எழுப்பியதால் பதட்டம் உருவானது . குழப்பமும் உருவானது . அமைதியாக ஜனநாயக வழியில் எடுக்கப்பட்ட முயற்சி , இதனால் பாதியிலேயே முடிந்தது . காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று நாங்கள் கருத்தாய்வை நிறுத்திவிட்டோம் .

அங்கே திரு OPS அவர்களது ஆதரவாளர்கள் ஒரு சார்பாக வாக்களிக்க தூண்டினார்கள் என்பதாக குற்றச்சாட்டு மறு தரப்பால் எழுப்பப்பட்டது . மேலும் 2 ஆயிரம் பேரின் கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள கூடாது என பலரும் கூறியதால் , அந்த கருத்தாய்வை நிராகரிக்க வேண்டியதாகிவிட்டது .

ஒரு நல்ல முயற்சி , நிராகரிப்புக்கு ஆளானதற்கு சகோதரர் . OPS ஆதரவாளரான நாகராஜன் போன்றோர் செய்த குழப்பம் தான் காரணமாகும் என்பதை பத்திரிக்கையாளர்கள் , உளவுத்துறையினர் உட்பட அனைவரும் அறிவர் .

இந்நிலையில் , யாரை ஆதரிப்பது என எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு பலமுறை கூடி விவாதித்தது .

திரு . செங்கோட்டையன் அண்ணன் எங்கள் தலைமையகத்திற்கு வந்தபோது அவர் எங்கள் ஆதரவை கேட்டார் . அப்போது பூரண மதுவிலக்கு மற்றும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் முன் விடுதலை ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து , ஏற்கனவே 20 நாட்களுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட மஜகவின் கோரிக்கைகளையும் நினைவூட்டினோம் .

அதுபோல் , திரு . மதுசூதனன் அண்ணனும் , மா. ஃபா. பாண்டியராஜன் அண்ணனும் வந்தபோது , நீங்கள் பாஜக ஆதரவோடு அதிமுகவை பிளவுபடுத்துவதாக குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது . எனவே , வகுப்புவாத சக்திகளை வளர விடமாட்டோம் என்று ஒரு அறிக்கையை தாருங்கள் என்றோம் . பிறகு இவர்களின் சார்பில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் அண்ணன் ஜெயபால் அவர்களும் , கமலக்கண்ணன் அவர்களும் மீண்டும் வந்தபோது அவர்களிடமும் இதை வலியுறுத்தினோம் . இதற்கு பதில் இல்லை . அண்ணன் OPS அவர்கள் தரப்பு மெளனம் காத்தது .

அதன்பிறகு தமிழ் தேசிய தலைவர்களும் , திராவிட இயக்க தலைவர்களும் , சிறுபான்மை இயக்க தலைவர்களும் எங்களிடம் பேசினார்கள் . பா ஜ க வின் சூழ்ச்சியை முறியடிக்க திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆதரிப்பது தான் நல்லது என்றார்கள் .

எனவே சமூகநீதி காக்கவும், சமூக நல்லிணக்கத்தை காக்கவும் தமிழகத்தின் நலன்கருதி , நாங்கள் அண்ணன் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தோம் .

இடையில் இரு தரப்பையும் ஒன்றிணைக்க சமாதான முயற்சிகளையும் முன்னெடுத்தோம் . இதை ஜூனியர் விகடன் கூட கழுகார் பகுதியில் செய்தி வெளியிட்டுள்ளது . அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது .

இந்நிலையில் நாகை தொகுதியில் உள்ள அண்ணன் OPS ஆதரவாளர்கள் , நீங்கள் ஏன் எடப்பாடிக்கு வாக்களித்தீர்கள் ? என கேட்கிறார்கள் . அதற்கான விளக்கத்தை மேலே தெளிவாக கூறிவிட்டோம் .

அடுத்து அதிமுக வின் 121 MLA க்களும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டார்கள் . தங்கள் கட்சியான அதிமுக பிளவுபடக்கூடாது என்றும் , ஆட்சிக் கவிழக் கூடாது என்றும் அவர்கள் முடிவெடுத்துள்ள நிலையில் , தோழமை கட்சியான நாங்கள் அதற்கு ஆதரவளிப்பது தான் கூட்டணி நியாயமாகும் .

எனது ஒரு ஓட்டு இல்லாவிட்டாலும் அவர்கள் ஆட்சி அமைத்துவிடுவார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும் . இந்நிலையில் தொகுதிக்கு எஞ்சிய 4 ஆண்டு காலத்திற்கு பல நன்மைகளை செய்யும் ஒரு வாய்ப்பையும் , தமிழ் சமுதாயத்திற்காகவும் , சிறுபான்மை சமுதாயத்திற்காகவும் பணியாற்றும் ஒரு வாய்ப்பையும் இழந்து விடக்கூடாது என தமிழ் சான்றோர்களும் , சமுதாயப் பெரியவர்களும் கூறிய அறிவுரைப்படியே நான் முடிவெடுத்தேன் . எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவும் அவ்வாறே வழி காட்டியது .

இந்நிலையில் , தொகுதியில் உள்ள அண்ணன் OPS ஆதரவாளர்கள் என் மீது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை . நாங்கள் இரட்டை இலை சின்னம் உள்ள அதிமுகவுடன் கூட்டணி என்ற அடிப்படையில் பயணிக்கிறோம்.

அண்ணன் OPS அவர்களின் மீதும் , தற்போது நாகை தொகுதியிலிருந்து சென்று அவருடன் இணைந்துள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அண்ணன் ஜீவானந்தம் , அண்ணன் ஜெயபால் ஆகியோரின் மீதும் எங்களுக்கு மரியாதை இப்போதும் இருக்கிறது .

ஆனால் எங்களின் யதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல் எங்களை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது .

நான் உறுதியாக நம்பும், இறைவன்_மீது_ஆணையாக இவ்விசயத்தில் நேர்மையாகவும் , கண்ணியமாகவும் நானும் என் கட்சியினரும் நடந்துக் கொண்டுள்ளோம்.

ஏதோ பணத்திற்கு விலை போனது போல அண்ணன் OPS அவர்களின் ஆதரவாளர்கள் எங்களை விமர்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது . நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் இவ்விசயத்தில் எவ்வளவு கண்ணியமாக நடந்துக் கொண்டோம் என்பதை இருதரப்பிலிருந்து வந்து எங்கள் தலைமை அலுவலகத்தில் சந்தித்த தலைவர்களிடம் கேட்டுவிட்டு எழுதுங்கள் .

எங்கள் கொள்கைகளை விலைக்கு வாங்கும் ரூபாய் நோட்டுக்கள் இன்னும் அச்சடிக்கப்படவில்லை என்பதை பெரு மகிழ்ச்சியோடு ஆணித்தனமாக தெரிவித்துக் கொள்கிறோம் .

எனவே அண்ணன் OPS ஆதரவாளர்களும் , சில ஊடக நண்பர்களும் நியாயமற்று விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் . எங்கள் கட்சியின் நிலையில் இருந்தவாறு இவ்விசியத்தை புரிந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

என் அருமைக்குரிய நாகை தொகுதி சகோதர … சகோதரிகளே … உங்களின் நலனுக்காக கீழ்க்கண்ட ஐந்து கோரிக்கைகளை அண்ணன் எடப்பாடி. கே. பழனிச்சாமி அண்ணன் தலைமையிலான அதிமுக அரசிடம் வைத்துள்ளேன் . அவை ,

* நாகை துறைமுகத்தை மேம்படுத்தி செயல்படுத்துவது .

* குடிநீர் பிரச்சினையை தீர்க்க பனங்குடி ஏரியை தூர்வாருவது .

* திருமருகலை தனி தாலுக்கா வாக அறிவிப்பது .

* நாகை தாமரை குளத்தை சீரமைப்பது .

* நாகூர் மீனவர்களின் நலன்காக்க வெட்டாற்றில் தடுப்பு கற்களை கொட்டுவது .

ஆகிய 5 கோரிக்கைகளை எழுத்து மூலமாக வைத்துள்ளேன் .

இதற்காகவும் , மேலும் வெட்டாற்றின் குறுக்கே உத்தம சோழபுரம் அருகே தடுப்பணை கட்டி நதிநீரை சேமிப்பது உள்ளிட்ட கோரிக்கைக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்பதையும் உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன் .

நன்றி .!

இவண் உங்கள் ஊழியன்
M.தமிமுன் அன்சாரி
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர்
இந்த விளக்கத்துக்கு தொகுதி மக்கள் என்ன கூறுகிறார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...