தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
காரைக்கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரைக்கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14-04-2019 இன்று முதல் தொடங்கிய வாரத்தில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?

14-04-2019 நேரம் காலை 10:45 மணி  எனது கடந்த பதிவில்  நான் குறிப்பிட்டு இருந்தது போல  நிகழும் வாரத்தின் மத்திய வார நாட்களில் தமிழகத்தின் மேற்கு உள் ,மேற்கு மற்றும் தென் உள் மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக 17-04-2019 அல்லது 18-04-2019 ஆம் தேதிகள் முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் நான் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலும் சில மத்திய உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.மழை பதிவாக தொடங்கியதும் மழைக்கு வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

தற்போது மேற்கத்திய கலக்கத்தின் (Western Disturbance) தாக்கத்தால் #ஈரான் அருகே வளிமண்டலத்தின் மேலடுக்கில் குறைந்த காற்றழுத்தம் நிலவி வருகிறது இம்முறை இது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தானை கடந்து ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதிகளை அடைய முற்பட்டு வலுவிழக்கும் இதன் காரணமாக இமய மலை பகுதிகளில் அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.மேற்கத்திய கலக்கத்தின் (Western Disturbance) தாக்கம் வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் 18-04-2019 ஆம் தேதி முதல் குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

பகல் நேர வெப்பநிலையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் வெப்பம் அதிகரித்து இருக்கவே வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக #வேலூர் , #திருச்சி  , #ஈரோடு  , #சேலம் ,#நாமக்கல் ,#தர்மபுரி ,#மதுரை , #விருதுநகர் ,#பெரம்பலூர் ,#அரியலூர் ,#தஞ்சை ,#கரூர் ,திருப்பூர் மாவட்டங்களிலும் #காஞ்சிபுரம் ,#விழுப்புரம் மற்றும் #திருவள்ளூர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் #திண்டுக்கல் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளிலும் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிக வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகலாம்.#கும்பகோணம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் பகல் நேரத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களில் 101 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதற்கு அதிகமான அளவு வெப்பம் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.வெப்பநிலை தொடர்பாக இனி வரக்கூடிய நாட்களில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.


மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) தற்போது அதன் இரண்டாவது  கட்டத்தில் 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் வலு குறைந்து உள்ளது அடுத்து வரக்கூடிய 2 அல்லது 3 நாட்களில் இதன் வலு மேலும் குறைய தொடங்கலாம் 20-04-2019 ஆம் தேதி வாக்கில் அதன் வலு சற்று அதிகரிக்க தொடங்கி 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் அதன் இரண்டாவது கட்டத்திலேயே (Phase 2) நிகழும் வாரத்தில் அது தொடரலாம்.

எல்-நினோ தெற்கு அலைவு
------------------------------------------
தற்போது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் 0.9 °C வெப்பமும் மேற்கு பகுதியான நினோ 4 பகுதியில் 0.8 °C வெப்பமும் கடந்த வாரம் பதிவாகி யுள்ளது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பசிபிக் கடல் பரப்பின் மத்திய மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளின் வெப்பம் இயல்பை விட அதிகரித்துள்ளது அதே சமயம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தோனேசியா அருகே உள்ள பசிபிக் கடலின் மேற்கு பகுதிகளில் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட குறைவாக உள்ளது.தற்போது பசிபிக் கடல் பரப்பில் எல் நினோவுக்கான சூழல்கள் நிலவி வருகின்றன இதன் வலு குறைந்து ஒரு பலவீனமான எல்நினோ வுக்கான சூழல்கள் இந்த ஆண்டின் நிகழும் இளவேனிற்கலாம் முழுவதும் தொடர 80% வாய்ப்புகள் உள்ளதாக NCEP இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby

இந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகை அருகே உள்ள மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு இடையிலான வெப்பநிலை வேறுபாட்டை அடிப்படையாக கொண்ட Indian Ocean Dipole தற்போது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது.இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT


அனைவருக்கும் எனது சித்திரைத் திருநாள் / தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


07-03-2019 இன்றைய வானிலை -தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகரித்த வெப்பம் - 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலவும் கடுமையான வெப்ப சூழல்

07-03-2019 நேரம் இரவு 7:40 மணி நான் காலையில் பதிவிட்டு இருந்தது போல இன்று பல இடங்களிலும் நிகழும் 2019 ஆண்டில் இதுனால் வரையில் பதிவானதில் மிக அதிக பட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.மார்ச் மாத முதல் தொடக்க நாட்களின் வெப்பமிகுதியான நாள் என்று கூட சொல்லலாம்.மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மார்ச் மாத முதல் இரண்டு வாரத்திற்குள் பதிவாகாத அளவு வெப்பநிலை தற்பொழுது பல இடங்களிலும் பதிவாகி வருகிறது குறிப்பாக 06-03-2019 ஆகிய நேற்று #தர்மபுரி பகுதியில் 40.2°C அதாவது 104.4°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதுவரையில் மார்ச் மாதத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுதான் இதற்கு முன்னதாக 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாளில் 40°C அதாவது 104°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதனிடையே 07-03-2019 ஆகிய இன்றும் தர்மபுரி அதிகபட்சமாக பகுதியில் 40°C அளவிலான வெப்பம் பதிவாகியுள்ளது அதேபோல #மதுரை மாநகரில் இன்று அதிகபட்சமாக கிட்டதட்ட 41°C அதாவது 105.8°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாளில் 41°C வெப்பம் பதிவாகியிருந்தது.தற்போது #தர்மபுரி  மாவட்டம் #நல்லம்பள்ளி அருகே மிக சிறிய மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

07-03-2019 இன்று மாலை 5:30 வரையில் பதிவான அளவுகளின் படி தமிழகத்தில் 100°F பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம் ) - 105.8°F (41°C)
#கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம் )  - 105.8°F (41°C)
#சேலம் (சேலம் மாவட்டம் )  - 105.4°F (40.8°C)
#வேடசந்தூர் AWS (திண்டுக்கல் மாவட்டம் ) - 104.9°F (40.5°C)
#திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 104.5°F (40.3°C)
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 104°F (40°C)
#திருச்சிராப்பள்ளி (திருச்சி மாவட்டம் ) - 104°F (40°C)
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 103.1°F (39.5°C)
#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 103.1°F (39.5°C)
#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 102.9°F (39.4°C)
#பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 101.6°F (38.7°C)
#நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம் ) - 101.6°F (38.7°C)
#கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 101.4°F (38.6°C)
#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 100.4°F (37.8°C)
#கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 100.4°F (37.8°C)

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்




24-12-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள் - அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை வாய்ப்புகள்

24-12-2018 நேரம் பிற்பகல் 1:40 மணி அந்த மேலடுக்கு சுழற்சியானது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தற்பொழுது மாலத்தீவுகள் அருகே நிலைக் கொண்டுள்ளது அதேபோல வடக்கு கேரளம் அருகே உள்ள கடல் பகுதியில் அழுத்தக் குறைவு ஏற்பட்டு ஒரு வளி மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது மேலும் நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல அந்த  மாலத்தீவுகள் கடல் பகுதியில் தற்பொழுது நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது நேற்று மேற்கு நோக்கி நகர்ந்து வந்ததால் #கோடியக்கரை உட்பட #நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு கடலோர பகுதிகளில் நேற்று இரவு முதல் சிறு சிறு மழை மேகங்கள் தொடர்ந்து குவிந்து வந்தன தற்பொழுதும் சற்று முன்பு #நாகை மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் அருகே சிறு சிறு மழை மேகங்கள் குவிந்து வந்தன அதேபோல தென் கடலோர மாவட்டங்களின் அருகே உள்ள கடல் பகுதியில் தொடர்ந்து மழை மேகங்கள் குவிந்து தென் உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பொழிவை ஏற்படுத்தியது மேலும் #நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் ஓரளவு நல்ல மழை பதிவாகியுள்ளது.தற்பொழுதும் தென் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை மேகங்கள் நுழைந்து ஆங்காங்கே கடலோர பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்தி வருகிறது.

24-12-2018 ஆகிய இன்று தென் உள் ,தென் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை ,குமரி ,விருதுநகர் மற்றும் தேனி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சற்று வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#நீலகிரி மாவட்டத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகலாம்.பொதுவாக இன்று சிவகங்கை ,மதுரை ,புதுக்கோட்டை ,விருதுநகர் ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் ,நெல்லை ,தூத்துக்குடி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.திருப்பூர் ,ஈரோடு ,கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று ஆங்காங்கே  சில இடங்களில் இன்று ஓரளவு நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இன்று கேரள மாநிலத்திலும் பல மிதமான இடங்களில் மழை பதிவாகலாம்.வட தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று முதல் வறண்ட வானிலையே நிலவ தொடங்கலாம் அவ்வப்பொழுது வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.


24-12-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 58 மி.மீ
#தலைநாயிறு (நாகப்பட்டினம் மாவட்டம் ) -34 மி.மீ
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 33 மி.மீ
#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 32 மி.மீ
#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 31 மி.மீ
#செய்யூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 25 மி.மீ
#மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம் ) - 25 மி.மீ
#திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 25 மி.மீ
#திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ
#மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 20 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#புல்வாய்க்கால் (விருதுநகர் மாவட்டம் ) - 17 மி.மீ
#ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 16 மி.மீ
#மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 15 மி.மீ
#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 13 மி.மீ
#தரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 13 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#மானாமதுரை (சிவகங்கை மாவட்டம் ) - 12 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம் ) - 12 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 11 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#கொள்ளிடம் -#அனைகாரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 10 மி.மீ
#குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம் ) - 10 மி.மீ
#கும்பகோணம் (தஞ்சை மாவட்டம் ) - 10 மி.மீ 
#திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 10 மி.மீ
#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 9.9 மி.மீ
#அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 9.4 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 9.4 மி.மீ

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


15-11-2018 காரைக்கால் நகர பகுதிக்கு 200 கி.மீ தொலைவில் கஜா (GAJA) புயல் - எங்கு கரையை கடக்கலாம் ?

15-11-2018 நேரம் பிற்பகல் 2:25 மணி தற்பொழுது அந்த தீவிர புயலான #கஜா (#GAJA) கிட்டத்தட்ட #காரைக்கால் நகரப்பகுதிக்கு 200 கி.மீ கிழக்கே நிலைக் கொண்டுள்ளது.அதனை காரைக்கால் வானிலை ஆய்வு மைய ராடார் படங்களின் வாயிலாக தெளிவாக அறியமுடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் #காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை பதிவாக தொடங்கலாம் குறிப்பாக அந்த புயல் #நாகை மாவட்டத்தின் கடலோர  பகுதிகளை நெருங்குகையில் #காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் நகர பகுதிகள்  உட்பட அம்மாவட்டங்களின் பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகலாம் மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அந்த தீவிர புயலானது மேலும் மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து இன்று 15-11-2018 ஆகிய இன்று நள்ளிரவு அல்லது 16-11-2018 ஆகிய நாளை அதிகாலை நேரத்தில் #காரைக்கால் - #கோடியக்கரை இடையே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம் மேலும் நான் முன்பு தெரிவித்து இருந்தது போல அந்த தீவிர புயலானது #வேதாரண்யம் சுற்றுவட்டப் பகுதிகளில் கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது மேலும் அது கரையை கடக்க முற்படுகையில் அதாவது இன்று இரவு அல்லது நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் #புதுச்சேரி ,#கடலூர் ,#அரியலூர் ,#பெரம்பலூர் ,#திருச்சி ,#தஞ்சாவூர் ,திருவாரூர் மற்றும் #புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஆங்காங்கே வலுவான காற்றுடன் கூடிய மழை பதிவாகலாம்.அது கரையை கடக்கையில் அப்பகுதிகளில் அதாவது #தலைஞானியறு உட்பட #வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் மணிக்கு 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் சமயங்களில் 120 கி.மீ வரையிலும் காற்று வேகம் எடுக்கலாம் #காரைக்கால் ,#நாகபட்டினம் ,#திருவாரூர் நகர பகுதிகளில் உட்பட அம்மாவட்டங்களின் கடலோர பகுதிகள் உட்பட ஆங்காங்கே இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.



#புதுச்சேரி மற்றும் #கடலூர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் மணிக்கு 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசலாம்.மேலும் #சீர்காழி ,#பரங்கிப்பேட்டை ,#பிச்சாவரம் ,#சிதம்பரம் ,#கொள்ளிடம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வரையில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம்.

மேலும் அந்த புயல் கரையை கடந்து வலுகுறைந்து #முத்துப்பேட்டை உட்பட #திருவாரூர் ,#புதுக்கோட்டை ,#திண்டுக்கல் மற்றும் #கோவை மாவட்டங்களின் தெற்கு பகுதிகள் வழியாக கேரளாவை அடைந்து பின்னர் 16-11-2018 ஆகிய நாளை நள்ளிரவு அல்லது 17-11-2018 ஆகிய நாளை மறுநாள் அரபிக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் இதன் காரணமாக முன்பு நான் முன்பு பதிவிட்டு இருந்தை போன்று 16-11-2018 ஆகிய நாளை #திருச்சி ,#மதுரை ,#ராமநாதபுரம் ,#சிவகங்கை ,#கரூர் ,#வால்பாறை உட்பட #திருப்பூர் மற்றும் #கோவை மாவட்டங்களின் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாகலாம்.சில பகுதிகளில் 200 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை கூட பதிவாகலாம்.இவை தவிர்த்து தமிழக்தின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் பரவலான மழை நாளை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் அது அரபிக்கடல் பகுதிகளை அடைந்து காற்றை தம்வசம் இழுப்பதாலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் இருப்பதாலும் 18-11-2018 ஆம் தேதி மற்றும் அதற்கு அடுத்த வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் 20-11-2018 மற்றும் 21-11-2018 ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.



அந்த புயல் #நாகை மற்றும் #காரைக்கால் மாவட்டங்களை நெருங்குகையில் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்





25-10-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

25-10-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

25-10-2018 நேரம் இரவு 10:10 மணி தற்பொழுது தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்ச்சி நிலவி வருகிறது அதே சமயம் நேற்று முன்தினம் கம்போடியா நாட்டுக்கு தெற்கே தாய்லாந்து வளைகுடா பகுதிகளுக்கு அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தற்பொழுது தாய்லாந்து வளைகுடா பகுதிகளில் ஒரு Trough ஆக நிலைகொண்டுள்ளது அதாவது அது ஒரு முலு சுழற்சியாக அல்லாத குறைந்த அழுத்தம் நிலவும் பகுதியை குறிக்கிறது மலாய கடலோர பகுதிகளை கடந்து அடுத்து வரக்கூடிய நாட்களில் அதவாது  26-10-2018 ஆகிய நாளை அது வங்கக்கடல் பகுதிக்கு வரலாம் மேலும்  28-10-2018 அல்லது 29-10-2018 ஆம் தேதி வாக்கில் அது மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒடிசா மற்றும் மேற்குவங்க பகுதிகளை நெருங்க முற்பட்டு வங்கதேசம் அருகே கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளது அதன் பின்னர் அதனுடைய தாக்கம் முற்றிலும் குறைந்த பிறகு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேற்கு நோக்கி நகர முற்படலாம் இதன் காரணமாக 31-10-2018 அல்லது 01-11-2018 ஆம் தேதி வாக்கில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உருவாகி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல்கள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இவை அனைத்தும் தற்பொழுது தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சி மற்றும் உருவாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கபடும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகளை பொறுத்து மாற்றங்களுக்கு உட்பட்டது.இந்த ஆண்டு இதுவரையில் இரண்டு முறை வட கிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு பின்னர் சாதகமான சூழல்கள் உருவாக வில்லையே அதைப்போன்று இம்முறையும் நடந்து விடுமா ? என்கிற கேள்வியை நீங்கள் முன் வைப்பீர்களானால் அதற்கான என்னுடைய பதில் இயற்கையை யாரும் இயக்கவும் முடியாது தடுக்கவும் முடியாது அதன் வழியை கட்டுப்படுத்துவம் இயலாது என்பதாக மட்டும் தான் இருக்க முடியும்.சாதகமான சூழல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதை உணர்ந்து நம்பிக்கையுடன் காத்திருப்பதே சிறந்தது என நான் கருதுகிறேன்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் நான் இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல 26-10-2018 ஆகிய நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டியுள்ள ஒரு சில உள் மாவட்டங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம் குறிப்பாக பகல் ,மாலை மற்றும் இரவு நேரங்களில் மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் வட கிழக்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும் இன்றே காரைக்கால் ,நாகப்பட்டினம் உட்பட வட கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் வட கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிகரித்து இருந்ததை உணர முடிந்தது கடலோர மாவட்டங்கள் தவிர்த்து அரியலூர் ,தஞ்சை ,திருச்சி உள்ளிட்ட உள் மாவட்ட பகுதிகளிலும் வட கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரிப்பு அதிகமாக உணரப்படலாம்.காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அடுத்த 3 அல்லது 4 நாட்களில் அதவாது 26-10-2018 முதல் 29-10-2018 வரையில் அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.தற்பொழுது பதிவிட்டு வருவதை போலவே அன்றன்றைக்கான மழைக்கான வாய்ப்புகளை தினமும் பதிவிடுகிறேன் மேலும் அடுத்த வரக்கூடிய 4 முதல் 5 நாட்களுக்கு வங்கக்கடல் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகரித்து இருக்க கூடும் மணிக்கு  35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் வட கிழக்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும்.

எல் -நினோ தெற்கு அலைவு (ENSO) ஆனது தற்பொழுது அதன் நடுநிலையான (Neutral Phase)  கட்டத்தில் உள்ளது ஆனபோதும் நினோ 1+2 பகுதியை தவிர்த்து  தற்போது நினோ 3, நினோ 4 ,நினோ 3.4 என பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பசிபிக் கடல் பரப்பின் பெரும்பாலான இடங்களிலும் அதன் இயல்பான சராசரி அளவுடன் ஒப்பிடுகையில் கடல் பரப்பு வெப்பநிலையானது 0.5° C க்கும் அதிகமான அளவில் அதிகரித்துள்ளது.குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகே அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது அதன் இயல்பான சராசரி அளவை  விட தற்போது 0.9° C அதிகரித்துள்ளது.அதே போல நினோ 3 பகுதியில் 1.0° C ,நினோ 4 பகுதியில் 0.9° C மற்றும் நினோ 1+2 பகுதியில் 0.3° C என்கிற அளவில் கடல் பரப்பு வெப்பநிலையானது அதன் இயல்பான அளவுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது அடுத்த 2 மாதங்களில் எல்-நினோவுக்கான சூழல்கள் உருவாக 70% சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் தேசிய சுற்றுசூழல் மற்றும் முன் அறிவிப்பு மையம் சார்பாக வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேடன் - ஜூலியன் அலைவு (#MJO) ஆனது தற்போது அதன் 8 வது கட்டத்தில் உள்ளது 1 க்கும் குறைவான வீச்சு அளவை கொண்டுள்ளது அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அதனை வீச்சு அளவு அதிகரித்து அதன் 8 ஆம் கட்டத்திலேயே வலுவடையலாம் பின்னர் அடுத்து வரக்கூடிய வாரத்தில் அது 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் அதன் 1 வது கட்டத்துக்கு நகர்ந்து வரலாம் மேலும் நவம்பர் முதல் வார இறுதியில் அல்லது இரண்டாவது வாரத்தில் அதாவது 07-11-2018 அல்லது 08-11-2018  ஆம் தேதி வாக்கில் 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் அது அதன் 2 வது கட்டத்துக்கு வர வாய்ப்புகள் உள்ளது.இது நவம்பர் மாத இரண்டாவது வாரத்தில் பருவமழைக்கு மிக சாதகமான ஒன்றாக அமையலாம்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

22-10-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய அதிகபட்ச மழை அளவுகள்

22-10-2018 நேரம் காலை 10:40 மணி நான் நேற்றைய எனது இரவு பதிவில் குறிப்பிட்டு இருந்த அந்த மன்னார் வளைகுடா பகுதிகளில் #ராமேஸ்வரத்துக்கு மேற்கே இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த அந்த மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது #தூத்துக்குடி க்கு மேற்கே ராமேஸ்வரத்துக்கு தென் கிழக்கே இலங்கையின் #மன்னார் பகுதிக்கு தெற்கே இலங்கைக்கு அருகே மன்னார்வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது மேலும் நேற்று நான் பதிவிட்டு இருந்தது போல நேற்று நள்ளிரவு நேரத்திலும் இன்று அதிகாலை முதல் தற்பொழுது வரையிலும் #காரைக்கால் மற்றும் #நாகை மாவட்டம் அருகே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிய தொடங்கின இன்று காலை வலுவான மழை மேகங்கள் வங்கக்கடல் பகுதியில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தி வந்தன #காரைக்கால் பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்திய மழை மேகங்கள் சற்று முன்பு #பூம்புகார் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பதிவாகி வந்தன அவை மேலும் நகர்ந்து நாகை மாவட்டத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் அங்கங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தலாம் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேலும் கிழக்கு நோக்கி நகர முற்படும் பட்சத்தில் மீண்டும் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக தொடங்கலாம்.

22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி மாநிலத்தில் பதிவாகிய மழை அளவுகள்

#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 28 மி.மீ
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 21 மி.மீ

22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #தமிழகத்தில் மழை பதிவாகிய ஒரு சில பகுதிகளின் நிலவரம்.

#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 90 மி.மீ
#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 86 மி.மீ
#கொள்ளிடம் - #அணைக்காரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 81 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) -70 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 66 மி.மீ
#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 65 மி.மீ
#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 65 மி.மீ
#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ
#சித்தாறு  (கன்னியாகுமரி மாவட்டம் ) -56 மி.மீ
#தென்காசி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 56 மி.மீ
#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 48 மி.மீ
#மணிமுத்தாறு  (திருநெல்வேலி மாவட்டம் ) - 35 மி.மீ
#செங்கோட்டை  (திருநெல்வேலி மாவட்டம் ) - 34மி.மீ
#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 33 மி.மீ 
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) -32 மி.மீ
#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) -31 மி.மீ
#சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 30 மி.மீ
#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 28 மி.மீ
#ஆயிக்குடி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 27 மி.மீ
#தொண்டி (ராமாநாதபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ
#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 23 மி.மீ
#கீரிப்பாறை  (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ
#பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ
#வலங்கைமான் (தஞ்சாவூர் மாவட்டம் ) -20 மி.மீ
#நாங்குநேரி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
#சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம் ) -20 மி.மீ
#திருநெல்வேலி (திருநெல்வேலி மாவட்டம் ) - 18 மி.மீ
#மாயனூர் (கரூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#அம்பாசமுத்திரம்  (திருநெல்வேலி மாவட்டம் ) - 17 மி.மீ
#கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) -17 மி.மீ
#அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#கிருஷ்னராயபுரம் (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#இளையான்குடி (சிவகங்கை மாவட்டம் ) -15 மி.மீ
#ராதாபுரம்  (திருநெல்வேலி மாவட்டம் ) - 13 மி.மீ
#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#விழுப்புரம்(விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ 



அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கான வாய்ப்புகளுடன் பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

21-09-2017 இன்று காலை காரைக்கால் கீரைத்தோட்டம் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது - தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களும் கடுமையாக போராடி வருகின்றனர்

21-09-2017 இன்று காலை காரைக்கால் கீரைத்தோட்டம் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென அருகில் இருக்கும் வீடுகளுக்கும் பரவியது,இன்னுமும் பரவி வருகிறது குறுகலான சாலை என்பதாலும் தீ விபத்து ஏற்பட்ட விஷயத்தை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக  அங்கு வந்து குவிந்ததாலும்  தீயை அணைப்பதிலும் ,தீயணைப்பு வாகனம் செல்வதிலும் சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது.மக்கள் தொடர்ந்து குடிவந்ததாலும் ,சாலைகளின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததாலும் ஜீவானந்தம் வீதி - PSR திரையரங்கம் செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து காவலர்களின் வருகைக்கு பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு தற்பொழுது தீயை அணைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.தீ பரவியதற்கான காரணங்கள்  குறித்தும் சேதங்கள்  குறித்தும்  முழுமையான தகவல் இதுவரையில் தெரியவில்லை.40க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானதாகவும் ஒருவர் உயிரிழந்து இருபாதகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்து வருகின்றனர். அனைத்து தகவல்களுடன் இன்னும் சற்று நேரத்தில் இதே பக்கத்தில் இப்பதிவு புதுப்பிக்கப்படும் .


காரைக்கால்  ஜீவானந்தம் மற்றும் கம்மாளர் வீதிகளில் இருந்து PSR திரையரங்கு செல்லும் சாலையில் ஒப்பிலாமணியர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது தான் இந்த கீரைத்தோட்டம் பகுதி ,சிறிய நிலப்பரப்பில் குளத்தை ஒட்டி திட்டத்திட்ட 300 க்கு மேற்பட்ட வீடுகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.21-09-2017 அன்று காலை 9:30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது காற்றின் வேகம் சற்று கூடுதலாக இருந்த காரணத்தால் அருகில் இருக்கும் குடியிருப்புகளுக்கும் தீ வேகமாக பரவ தொடங்கியது.தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முற்படும் பொழுது திடீரென குடியிருப்புகளில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் ஒவ்வொன்றாக வெடித்து சிதற தொடங்கின. சமையல் எரிவாயு உருளைகள் வெடித்த பொழுது ஏற்பட்ட சப்தம் அரை கிலோமீட்டர் வரை உணரப்பட்டது பின்னர் கீரைத்தோட்டத்தை சுற்றி இருக்கும் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது அதன் பிறகு காரைக்கால் ONGC மற்றும் மார்க் தனியார் துறைமுகங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன திட்டத்திட்ட ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது இந்த தீ விபத்தில் 40 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானதாகவும் ,முதியவர் ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரியவந்துளது.

21-09-2017 அன்று தீ விபத்து ஏற்பட்ட கீரைத்தோட்டம் பகுதியில் ஸ்ரீ சிங்கமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது அந்த கோயில் சன்னதியில் 70 வயது நிரம்பிய முதியவரான மோகன் என்பவர் தனது மனைவி மஞ்சுளாவுடன் வசித்து வந்துள்ளார்.உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மஞ்சுளா சிகிச்சை பெற்று வருவதால் மோகன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.வீடு தீப்பிடிக்க தொடங்கியவுடன் வெளியே வரமுடியாமல் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளார்.தீ கட்டுக்குள் வந்த பிறகு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் அப்பகுதிக்கு வந்து மக்களுக்கு தற்காலிக உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்து சென்றனர்.மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி சீருடையுடன் ஆசிரியருக்கு தேநீர் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவன்...முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தால் பரபரப்பு...அரசுப்பள்ளிகளில் மாணவர்களை கையாளும் விதம் குறித்து சமூக ஆர்வலர்கள் காட்டம்

சில தினங்களுக்கு முன்பு முகநூலில் காரைக்கால் தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்வுகளை வெளியிடும் முகநூல் பக்கம் ஒன்றில் காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த அரசுப்பள்ளி மாணவன் ஒருவன் பள்ளி நேரத்தில் பள்ளி சீருடையுடன் குடுவையில் (Flask) தேநீர் வாங்கிக்கொண்டு செல்லும்  புகைப்படம் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.அந்த மாணவன் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியருக்கு தேநீர் வாங்கி சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த புகைப்படத்தில் பள்ளியின் வாசலில் சீருடையுடன் அந்த மாணவன் குடுவையை கையில் ஏந்தி பள்ளியை நோக்கி செல்வதை அழகாக பதிவு செய்து இருக்கின்றனர் அந்த புகைப்படம் தற்பொழுது காரைக்கால் முகநூல் பயனீட்டாளர்களிடம் வைரலாகி வருகிறது.

அந்த மாணவன் இடைவெளியின் பொழுது வெளியே வந்திருக்கலாம் என்று எடுத்துக்கொண்டாலும் அச்சமயத்தில் அவனை தவிர வேறு மாணவர்கள் யாறும் ஏன் அங்கு இல்லை என்ற கேள்வி எழுகிறது ஒருவேளை அவன் விடுமுறை நாளில் இப்படி நின்றிருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் விடுமுறை நாளில் அரசுப் பள்ளி மாணவன் ஏன் சீருடையுடன் திரிய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது இந்த இரு கேள்விகளுக்கான பதிலை தேடி சென்றாலே அந்த மாணவன் பள்ளி இயங்குகையில் வெளியில் சென்று வந்தது தெளிவாக தெரியவந்துவிடும்.சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் வகுப்பு நடைபெறும் சமையத்தில் ஒரு மாணவன் வெளியே சென்று உள்ளே வருகிறான் என்றால் அது அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு தெரியாமலா இருக்கும் ? இல்லை ஆசிரியர்களின் அனுமதியுடன் தான் அவன் வெளியில் சென்று குடுவையுடன் உள்ளே வந்தானா ? இந்த இரு கேள்விகளுக்கும்  பதிலை தேடினால் அந்த புகைப்படத்தின் உள்ளடக்கம்  தெளிவாக புரிந்துவிடும்.இந்த புகைப்படம் தொடர்பாக நாம் இதற்கு மேல் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை இது பல அரசுப்பள்ளிகளில் வாடிக்கையாக நடக்கும் ஒரு நிகழ்வாக கூட இருக்கலாம் ஆனால் இது முறைதானா ? என்பது தான் இப்போதைய கேள்வி.

ஜாதி ,மதம் ,உயர்ந்தவன் ,தாழ்ந்தவன் ,பணக்காரன் ,ஏழை போன்ற வித்தியாசங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான் அவர்களை சீருடை அணிந்து பள்ளிக்கு வரச்சொன்னோம் ஆனால் ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர்களை மதிப்பெண்களுக்கு ஏற்ப  தரம்பிரித்து வருகின்றனர் என்பதையும் இந்த காட்சி விளக்குகிறது பரிட்சையில் நிறைய மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பெஞ்சையும் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தரையையும் சில பள்ளிகள் தரம் பிரித்து ஒதுக்கி வருவதாகவும் சில மாணவர்கள் கூறுகின்றனர்.சில பள்ளிகளில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களை தேநீர்,சமோசா போன்றவற்றை வாங்கி வருவதற்கும் எடுபுடி வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்களாம்.

இதில் அதிகமாக பாதிக்கப்படுவது வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தும் சமூகத்தில் பின்தங்கிய வகுப்பை சார்ந்த மாணவர்களும் தான்.தன் மகன் தன்னை விட ஒரு படியாவது மேலே வந்து விட வேண்டும் என்பதற்காகவே  ஏழை ,எளிய பாமர மக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவைக்கின்றனர் ஆனால் அங்கு அவர்கள் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள் என்று  அவர்களுக்கு தெரிவதில்லை குறைந்த மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் வகுப்பறையில் மற்ற மாணவர்கள் முன் அவுமானப்படுத்துவதாகவும் சில மாணவர்கள் கூறிவருகின்றனர் இதனால் சிறு வயது முதலே அவர்கள் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.சரி பள்ளிகளில் மாணவர்களை கையாளும் விதங்களை விவாதிக்க இந்த ஒரு பதிவு போதாது மீண்டும் ஒரு பதிவில் அவற்றை விரிவாக விவாதிக்கலாம்.

தற்பொழுது முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த புகைப்பட விவகாரத்துக்கு வருவோம்,இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு எப்படியும் மூன்று முதல் நான்று நாட்களுக்கு மேல் இருக்கும்.ஆனால் காரைக்கால் கல்வித்துறை இதுகுறித்து என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்று இதுவரையில் புரியாத புதிராகவே உள்ளது.இந்த விவகாரத்தில் நடவடிக்கை என்று ஒன்று எடுத்தால் மட்டுமே அரசு பள்ளிகளை தேடி வரும் ஏழை மாணவர்களின் கண்ணியம் காக்கப்படும்.

ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் இந்த விவகாரம் தொடர்பாக நல்லதொரு முடிவை எடுத்து இதைப்போன்ற விஷயங்கள் இனி வரக்கூடிய காலங்களில் நடவாமல் இருக்க ஒரு முற்றுப்புள்ளியை வைப்பார்கள் என நம்பலாம்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் காவிரி மகா புஷ்கர திருவிழா 2017 செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது

வருகின்ற 12-09-2017 (செப்டம்பர் 12 ) ஆம் தேதி முதல் 24-09-2017 (செப்டம்பர் 24) ஆம் தேதி வரை 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் காவிரி மகா புஷ்கர திருவிழா காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கொம்யூனை சார்ந்த அகலங்கன்னு கிராமத்தில் உள்ள அரசலாற்று பகுதியில் கொண்டாடப்பட உள்ளது.பக்தர்கள் நீராட வசதியாக அப்பகுதியில் சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் நீர்த்தேக்கம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது முன்னதாக காரைக்கால் அருகாமையில் உள்ள மயிலாடுதுறை துலாக்கட்டம் பகுதியில் கொண்டாடப்பட இருக்கும் காவிரி புஷ்கர திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்தே முறையாக திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.சில தினங்களுக்கு முன் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர விழாவுக்கான நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்டு அழைப்பிதலும் வெளியிடப்பட்டு விட்டது .இந்நிலையில் திடீரென காரைக்கால் மாவட்டத்தில் புஷ்கர விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டு இருக்கின்றன .

குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்பொழுது அந்த ராசிக்கு உரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படும்.அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு குருபெயர்ச்சியின் பொழுது ஆந்திர மாநிலம் கோதாவரியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.நிகழும் 2017 ஆம் ஆண்டில் குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர இருப்பதால் துலாம் ராசிக்கு உரிய நதியான காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்பட இருக்கிறது . இதற்கு முந்தைய காலங்களில் காரைக்கால் மாவட்டத்தில் இதைப்போன்றதொரு விழா நடைபெற்று வந்ததற்கான வரலாறு இருக்கிறதா என்ற ஒரு கேள்வியை முன்வைத்தால் அதற்கான பதில் சரியாக தெரியவில்லை என்பதாக தான் இருக்கும்.இத்தனை நாட்கள் இந்த விழா குறித்து  ஒரு தகவல்களையும் வெளியிடாத காரைக்கால் மாவட்ட நிர்வாகம் திடீரென புஷ்கர விழா ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி இருப்பது எதனால் என்று தான் புரியவில்லை.மயிலாடுதுறையில் அழைப்பிதழ் வெளியிட்ட பிறகு தான் இவர்களுக்கு இப்படி ஒரு விழா இருப்பதே தெரிய வந்திருக்கும் என்று நாம் எடுத்துக்கொண்டாலும் விழா நடைபெற இருக்கும் 13 நாட்களுக்கும் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு  செய்யப்பட்டிருக்கிறது ?  எப்பொழுது பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவார்கள்?  நிகழ்ச்சி நிரல் ஏன் இன்னும் வெளியிடப்பட வில்லை ?  இதைப்போன்ற பல கேள்விகள் தற்பொழுது காரைக்கால் மாவட்ட மக்கள் மனதில் எழுந்துள்ளது.வரக்கூடிய நாட்களில் மாவட்ட நிர்வாகம் இதற்கெல்லாம் பதில் வழங்கும் வகையில் தகவல்களை வெளியிடுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி சுகாதார கேட்டை உருவாக்கிவரும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் - காரைக்கால் நகராட்சி ஆணையர்

காரைக்கால் நகராட்சி ஆணையர் சுதாகர் தலைமையில் காரைக்கால் நகராட்சிகளில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை முதுபான விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அப்பொழுது காரைக்கால் காமராஜர் சாலையில் ராயல் மஹால் திருமண நிலையத்துக்கு மிக அருகில் இயங்கிவந்த  ஒரு மொத்த மது விற்பனை கடையின் முன் அமர்ந்து சிலர் மது அருந்துவது தெரியவந்தது அதுமட்டுமல்லாமல் அந்த கடைக்கு எதிரே இருக்கும் சாக்கடையில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகள் கொட்டப்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதும் அந்த கடைக்கு அருகே பிளாஸ்டிக் பாட்டில்கள் குவித்துவைக்கப்பட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.இதனையடுத்தது அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்த கடைகளுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்பட்டது மேலும் இது தொடர்பாக நகராட்சி ஆணையர் சுதாகர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது காரைக்கால்  நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி சுகாதார கேட்டை உருவாக்கிவரும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.




நடுவழியில் பழுதாகி நின்றுபோன காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்....மிகுந்த சிரமத்துக்கு உள்ளான பயணிகள்

நேற்று மதியம் காரைக்காலில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்ற காரைக்கால் to திருச்சி பயணிகள் ரயில் அதன் இன்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக திருவாரூர் அருகே உள்ள குளிக்கரை ரயில் நிலையத்தை அடைந்த பொழுது திடீரென நின்றுபோனது அதனால் அந்த ரயிலில் பயணித்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் நேற்று வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தின் திருவிழா காரணமான அந்த தடத்தில் இயங்கிவந்த னைத்து ரயில்களிலும் ,பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது இந்நிலையில் பழுதாகி நின்றுபோன இந்த ரயிலினால் சிறிது நேரம் குளிக்கரை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பயணிகள் அனைவரும் அத்தடத்தில் பயணம் மேற்கொள்ளும் வேறு மாற்று ரயில்களுக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த இன்ஜினில் ஏற்பட்ட கோளாறை திருச்சியில் இருந்து வரும் ரயில்வே அலுவலர்கள் தான் சரி செய்வார்கள் அப்படி பழுது நீக்க முடியாத நிலையில் வேறு இன்ஜினின் உதவியுடன் இந்த ரயில் இழுத்துச்செல்லப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நல்லவேளையாக நேற்று ரயில் குளிக்கரையில் நின்றுபோனது அப்படியில்லாமல் ஒரு பழுதடைந்த பழைய ரயில்வே பாலத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத நடுக்காட்டில் நின்று இருந்தாலோ என்ன ஆகியிருக்கும் ? காரைக்காலில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டு வரும் ரயில் இன்ஜினில் இப்படி அடிக்கடி பழுது ஏற்படுவதாக அந்த தடத்தில் தொடர்ந்து பயணம் செய்து வரும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.காரைக்காலில் இருந்து ஒரு ரயிலை இயக்க வேண்டுமே என்பதற்காக காலாவதியான பழைய இன்ஜீன்களை எல்லாம் காரைக்கால் to திருச்சி பயணிகள் ரயிலில் பொருத்தி பரிட்சயம் செய்து வருகின்றனர் என்றும் பொதுமக்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். 


29-08-2017 (நாளை ) வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது - வெளியூர்களில் இருந்து நாகை மற்றும் காரைக்கால் வழியாக நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாகபட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப்புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. அத்தேவாலயத்தின் ஆண்டுத் திருவிழாவானது நாளை 29-08-2017 (செவ்வாய்க்கிழமை ) அன்று கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள்  வேளாங்கண்ணிக்கு வருகை புரிவர்,அந்த வகையில் நாளை வேளாங்கண்ணியில் கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கும் ஆண்டுத் திருவிழாவுக்காக காரைக்கால் ,நாகப்பட்டினம் மார்க்கமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

காரைக்காலில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் வேளாங்கண்ணிக்கு, புனித ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத்திருவிழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காவி உடை அணிந்து ,மாதா தேர் ,மாத கோடி ஆகியவற்றை சுமந்தபடி நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வந்து சேருவர்.நாளை கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கும் வேளாங்கண்ணி ஆலய திருவிழாவால் இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் காவி உடை அணிந்து நடந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்த எண்ணிக்கையானது இன்று மாலை முதல் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


25-08-2017 இன்று காரைக்காலில் விமரிசையாக அரங்கேறும் விநாயகேர் சதுர்த்தி திருவிழா கொண்டாட்டங்கள் - இம்முறை களி மண்ணால் செய்த விநாயகர் சிலையை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

25-08-2017 இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இயற்கைமுறையில் அதாவது களிமண்,விதைகள் மற்றும் எளிதில் மக்களும் தன்மை உடைய பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்க  பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சுற்றுப்புறச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ராசாயனங்கள் குறித்த விழிப்புணர்வு இம்முறை மக்களிடம் அதிகரித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் நிகழும் 2107 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றே சொல்லலாம்.

24-08-2017 நேற்று மாலை முதல் காரைக்காலின் பல்வேறு பகுதிகளில் இயற்கைக்கு பாதிப்புகளை உண்டாக்காத களி மண்களால் செய்த விநாயகர் சிலைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது மேலும் அந்த விநாயகர் சிலைகள் ₹ 50 முதல் ₹60 ரூபாய்க்குள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அந்த சிலைகளை வாங்க ஆர்வம் கட்டி வருகின்றனர்.


21-08-2017 (திங்கள்கிழமை) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

21-08-2017 (திங்கள்கிழமை ) அன்று காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் மாதத்திற்கான இரண்டாவது பொதுமக்கள் குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியரகத்தில் காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள்கிழமைகளில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றுவருகிறது இந்த முகாமில் அணைத்து அரசுத்துறை அலுவலக தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டு ,பொதுமக்களின் குறைகளுக்கு நேரடியாக பதில் வழங்குவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆனால் மாதந்தோறும் பொதுமக்களின் குறைதீர் கூட்டம் என்ற ஒன்று  பெயரளவில் மட்டும் நடைபெற்று வந்தால் போதாது.உண்மையில் ஏழை எளிய சாமானியன் ஒருவன் அதிகாரகிகளிடம் தங்களின் குறைகளை தெரியப்படுத்தி தீர்வு காண இந்த மக்கள் குறைதீர் கூட்டம் வழிவகை செய்ய வேண்டும்.மக்களின் பிரநிதிகள் என்று யாரோ ஒரு சிலர் குறைகளை முன்வைப்பதை விட தயக்கம் இன்றி தங்களின் குறைகளை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தீர்வு கான பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.அப்பொழுது தான் இதைப்போன்ற கூட்டங்கள் எதற்காக மேற்கொள்ளப்படுகிறதோ அதற்கான இலக்கை அடையமுடியும்.

15-08-2017 அன்று 278 ஆண்டுகள் பழமைவாய்ந்த காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய அலங்கார தேர்பவனி மிக விமரிசையாக நடைபெற்றது

15-08-2017 அன்று காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய தேர்பவனி மிக விமரிசையாக நடைபெற்றது ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாளில் இந்த தேர்பவனியானது நடைபெறும் அதன்படி இந்த 2017ஆம் வருடத்திற்கான ஆண்டுத் திருவிழா கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது இதனையடுத்து 15-08-2017 (நேற்று ) அன்று மாலை புதுவை - கடலூர் மறைமாவட்ட கல்விக்குழுத் தலைவர் திரு ஜோசப்ராஜ் அவர்களின் தலைமையில் சிறப்பு திருவிழா திருப்பலி நடைபெற்றது பின்னர் தூய தேற்றரவு அன்னை அலங்கார தேர்பவனியும் நடைபெற்றது.

காரைக்கால்  தூய  மரியன்னை தேற்றரவு ஆலயம் குறித்த சில தகவல்கள் : 

காரைக்கால் நகரம் பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்த பொழுது 1739ஆம் ஆண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டது.1960ஆம் ஆண்டு காரைக்கால் நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பொழுது இந்த ஆலயம் முழுவதுமாக இடிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.சில காலங்களுக்கு பிறகு மீண்டும் பிரெஞ்சுக் காரர்களால் 1770ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.அதன் பிறகு 1867ஆம் ஆண்டு ஆலயத்தினை அழகூட்டும் பொருட்டு பளிங்கு கல்லிளால் ஆன பலிபீடம் அமைக்கப்பட்டதாக சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

133 அடி உயர்ந்து நிற்கும் கோபுரத்தின் அழகினை மேலும் மெருகு ஏற்றும் வகையில் மூண்று (3) மிகப்பெரிய நேரம் காட்டும் கடிகாரங்கள் மற்றும் 5 மணிகள் அந்த 5 மணிகள் எழுப்பும் ஓசை 5 கிலோ மீட்டர் சுற்றளவு வரை கேட்க்கும் படி அமைக்கப்பட்டு 1891ஆம் ஆண்டு கட்டி  முடிக்கப்பட்டது.இன்று வரை ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் தேற்றரவு மாதா விழாவாக கொண்டாடப்பட்டு கொடியேற்றப் படுகிறது. 1991ஆம் ஆண்டு மணிக்கூண்டு கோபுரத்தின் நூற்றாண்டும் ஆலயத்தின் 250 வது ஆண்டும் விழாவாக கொண்டாடப்பட்டது.

காரைக்கால் தூய தேற்றரவு ஆலய தேர்பவனி 2017 புகைப்படங்கள்












09-08-2017 முதல் 18-08-2017 வரை காரைக்காலில் மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - 75% சதவிகித மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படும் - காரைக்கால் மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர்

வரும் 09-08-2017 (ஆகஸ்ட் 9) ஆம் தேதி முதல் 18-08-2017 (ஆகஸ்ட் 18) ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்க விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு 75% சதவிகித மானியத்துடன் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் மதியழகன்.க வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நகர்புறங்களில் காய்கறிகள் உற்பத்தியை பேருக்கும் நோக்கத்தில் ,வேளாண் துறை மூலம் தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ,வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது.அதன்படி 75 % சதவிகித மானியத்தில் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க தேவையான இடு பொருட்கள் வழங்கப்பட உள்ளன இதற்கான விண்ணப்பங்கள் 09-08-2017 முதல் 18-08-2017 தேதி வரை வேலைநாட்களில் வழங்கப்பட உள்ளது .மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க விருப்பமும் இடவசதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் வீட்டின் உரிமை ஆவணம்  (மின் கட்டண ரசீது அல்லது குடிநீர் கட்டண ரசீது ) மற்றும் ஆதார் அட்டை ,தேர்தல் அடையாள அட்டை ,குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.விண்ணப்பங்கள் அந்தந்த பகுதி உழவர் உதவியக வேளாண்  அலுவலர் மூலம் பரிசீலிக்கப்பட்டு இடுபொருட்கள் வழங்கப்படும் மேலும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




07-08-2017 இன்றுடன் இந்த ஆண்டுக்கான காரைக்கால் மாங்கனி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைகின்றன (விடையாற்றி உத்சவம் )

கடந்த  ஜூலை மாதம் 6ஆம் (06-07-2017) தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி காரைக்காலில் தொடர்ந்து விமரிசையாக நடைபெற்று வந்த மாங்கனி திருவிழா நிகழ்ச்சிகள் யாவும் 07-08-2017 (திங்கட்கிழமை ) இன்று மாலை 6:00 மணிக்கு  நடைபெற இருக்கும் புனிதவதியார் (காரைக்கால் அம்மையார் ) வீதியுலாவுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த ஒரு மாத காலமாக காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் நடைபெற்று வந்த கலை நிகழ்ச்சிகளும் இன்றோடு நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக 06-08-2017 நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் மாங்கனி திருவிழா நிகழ்ச்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்ததாலும் காரைக்கால் பாரதியார் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த மாங்கனித் திருவிழா கடைகளில் பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து இருந்தது.பாரதியார் வீதி ,மாதா கோயில் வீதி ,திருநள்ளாறு ரோடு ஆகிய முக்கிய சாலைகளில் ஒரு சில இடங்களில் சாலை நெரிசலும் ஏற்பட்டது.


புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி  யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி ,காரைக்கால் ,மாஹி ,ஏனாம் என நான்று மாவட்டங்கள் உள்ளன.கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி புதுச்சேரி மாவட்டத்தில் அதிகபட்சமாக  9,50,289 ( ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரத்து இருநூற்று எண்பத்து ஒன்பது)  பேரும் இதற்கு அடுத்தபடியாக காரைக்கால் மாவட்டத்தில் 2,00,222 ( இரண்டு லட்சத்து இருநூற்று இருபத்து இரண்டு ) பெரும் இதற்கு அடுத்த படியாக ஏனாம் மற்றும் மாஹியில் முறையே  55,626 (ஐம்பத்து ஐந்தாயிரத்து ஆருனுற்று இருபத்து ஆறு ) மற்றும் 41,816 (நாற்பத்து ஓராயிரத்து எண்ணுற்று பதினாறு ) பெரும் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டது.

மாவட்டம்                                                            மக்கள்தொகை

புதுச்சேரி மாவட்டம்            ---------------->      9,50,289

காரைக்கால் மாவட்டம்      ---------------->     2,00,222

ஏனாம் மாவட்டம்                  ---------------->        55,626

மாஹி மாவட்டம்                   ---------------->        41,816


 புதுச்சேரி மாவட்டத்தில் புதுச்சேரி ,உழவர்கரை என 2 நகராட்சிகளும் ,காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் நகராட்சியும் ,ஏனாமில் ஒரு நகராட்சியும் ,மாஹியில் ஒரு நகராட்சியும் என புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 5 நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நகராட்சிகளின் மக்கள் தொகை.

 நகராட்சி                                                            மக்கள்தொகை

புதுச்சேரி                       ---------------->              2,44,377

உழவர்கரை                  ---------------->              3,00,104

காரைக்கால்                ---------------->                  86,838

ஏனாம்                            ---------------->                   55,626

மாஹி                             ---------------->                   41,816


இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெற்றறுவிட்ட நிலையில் இந்த 6 ஆண்டுகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மக்கள் தொகையின் எண்ணிக்கை கணிசமான விகிதத்தில் அதிகரித்து உள்ளது.பக்கத்தில் உள்ள மாநிலமான தமிழகத்தில் மாநில அரசு புதுச்சேரியை விட மக்கள் தொகையிலும் வருமானத்திலும் குறைவான புள்ளிகள் பெற்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி சமீபத்தில் அறிவித்தது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் புதுச்சேரியை இடம்பெற செய்ய புதுச்சேரி நகராட்சியுடன் தாலுக்காவில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஒரு சில பகுதிகளை இணைத்து புதுச்சேரி அரசு ஒப்புதலுக்கு அனுப்பியது அது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி மாவட்டத்தில்  ஸ்மார்ட் சிட்டி அமைய உள்ள பகுதிகள் அனைத்தையும் இணைத்து அப்படியே ஒரு மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று  பொது மக்கள் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்து  வருகின்றனர்.

அதே போல காரைக்கால் நகராட்சியுடன்  அதற்கு அருகே உள்ள கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஒரு சில பகுதிகளை இணைத்து  உழவர்கரை மற்றும் காரைக்கால் நகராட்சிகளில் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அவற்றை பெரு நகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

காரைக்காலுக்கு அருகே இருக்கும் நாகப்பட்டினம் நகராட்சியுடன் நாகூர் பகுதியை இணைத்து நாகபட்டினத்தை தேர்வு நிலை நகராட்சியாக தமிழக அரசு அறிவித்தது அதேபோல திட்டத்திட்ட 1,40,000 மக்கள் தொகையை கொண்ட கும்பகோணம் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக அறிவித்து பெருநகராட்சியாக தரம் உயர்த்தியது.

ஒரு நகரத்தின் மக்கள் தொகை ,வருமானம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப அதன்  தரம் உயர்த்தபட்டால் மட்டுமே அந்நகரங்களில் வாழும் மக்களுக்கு சிறந்த சேவையை அரசால் வழங்க முடியும் ஆனால் புதுச்சேரியில் இது வரை அப்படி செய்யப்படவில்லை இனியாவது புதுச்சேரியை மாநகராட்சியாகவும் , உழவர்கரை மற்றும் காரைக்கால் நகராட்சிகளை பெருநகராட்சிகளாகவும்  புதுச்சேரி அரசு தரம் உயர்த்துமா ? என்ற கேள்வி புதுவை மாநில மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

காரைக்காலில் பரவும் டெங்கு காய்ச்சல் - கடந்த 2 நாட்களில் 68 பேருக்கு டெங்கு காய்ச்சலூக்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது - காரைக்கால் அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

காரைக்கால் மாவட்டத்தில் தங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருக்குமோ  என்ற அச்சத்தில் மருத்துவமனையை தேடி வரும் பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது.ஆம் கடந்த 2 நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை செய்துள்ளனர் இதில் 68 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு முதல் கட்டத்திலேயே சிகிச்சைகள் வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப் பட்டனர் எனவும் 14 நபர்கள் மருத்துவமனைகளிலேயே தங்கி சிகிச்சை பெற்று அதில் 6 நபர்கள் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மீதம் உள்ள 8 நபர்களுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் காரைக்கால் அரசு மருத்துவமனையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










திருவிடைமருதூர் அருகே 1344 காரைக்கால் மதுபாட்டில்கள் பறிமுதல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் காரில் கிடத்தி வரப்பட்ட 1344 காரைக்கால் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் காரில் கிடத்தி வந்துகொண்டிருப்பதாக திருநீலக்குடி காவல்நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து 30-07-2017 (நேற்று ) அன்று மாலை திருவிடைமருதூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர் அப்பொழுது காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக வந்த ஒரு காரை மறைத்து சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது காரில் இருந்த ஓட்டுனர் திடீரென தப்பி ஓடினார் இதனையடுத்து காரில் சோதனை நடத்தியபொழுது காரைக்காலை சார்ந்த 1344 மதுபாட்டில்கள் அந்த வாகனத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து காரில் இருந்த காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த ஒருவரை தமிழக போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Posts Plugin for WordPress, Blogger...